காவேரி


கழனிதனை காக்க
காவேரி வேண்டுமா?
கிரிக்கெட்தனை போற்றி
கீழ்மைபெற வேண்டுமா?
குணம்தனை கெடுக்கும்
கூத்தாடிகள் வேண்டுமா?
கெடுமதி யாளர்களை
கேள்வி கேட்க வேண்டுமா?
கைகட்டி வாய்பொத்தி
கொடுமைபட வேண்டுமா?
கோட்டைகளை எதிர்த்த
கெளரவம் வேண்டுமா?

Advertisements
Posted in கவிதைகள் | பின்னூட்டமொன்றை இடுக

இளவேனில்!


இளவேனில்!
இதமான பெயர்!
இலக்கை சுடுவதில்,
இளையோர் கோப்பை வென்றாள் !
இறும்பூதடைந்தேன்!
இவளை அறிந்தவன் என்றா,
இல்லை!
இவள் ஒரு
இந்திய குடிமகள் என்றா,
இல்லை!
இவள் ஒரு
இளந்தமிழச்சி என்றா,
இல்லை!
இவள் பெயர்
இளவேனில்!! தமிழ்ப்பெயர்!!
இதுவே காரணம் என்
இரட்டிப்பு மகிழ்ச்சிக்கு!

Posted in கவிதைகள் | பின்னூட்டமொன்றை இடுக

தமிழ்ப்பயணம்


உயர்வு

செந்தமிழ் கற்க, தமிழாவ லுயரும்!
தமிழாவ லுயர, தமிழ்ப்பற்று யரும்!
தமிழ்ப் பற்றுயர, தமிழ்மொழி உயரும்!
தமிழ்மொழி உயர, தமிழ்ப்புகழ் உயரும்!
தமிழ்ப்புக ழுயர, தன்னாலே
தமிழராம் நாம் உயர்வோம்!

Posted in கவிதைகள் | பின்னூட்டமொன்றை இடுக

தமிழ்ப் பயணம்


அமிழ்தம்

ஆருயிர் அமிழ்தே!
உன் பெயர்தான் தமிழோ!
உனை நினைத்தாலே
உருகிப் போகுதெம் மனசு!
நின் மொழிக் கடலில்
மூழ்க துடிக்குதெம் முசுரு!
பருக பருக திகட்டா
தீஞ்சுவை நீயோ!
அதை அறியாதோர்
யாவரும் பேயோ!

Posted in கவிதைகள் | பின்னூட்டமொன்றை இடுக

பெரியாரை பின்பற்றும் தமிழக இந்துத்துவவாதிகள் …


நன்றி! முதலில் ஒரு தமிழனாக இவர்களுக்கு நன்றி தெரிவிப்பது நம் கடமை.  என்னதான் இவர்கள் ஒரு இந்துத்துவ கட்சியாக இருக்கட்டும், தமிழ்நாட்டில் மட்டும் இவர்கள் சூழ்நிலை கைதிகளாக இருக்கிறார்கள்.  அந்த மட்டும் நமக்கு மட்டற்ற மகிழ்ச்சி.

பெரியாரால் தமிழகத்திற்கென தனியொரு பெருமை உண்டு.  அது, தமிழகம் தவிர்த்து இந்தியாவின் மற்ற மாநிலங்களை போல் அல்லாமல் பெயர் அளவிலாவது தம் பெயருக்கு முன்னாலோ பின்னாலோ சாதியை ஒழித்து உள்ளோம்.

ஆனால் வெளிமாநிலங்களில் வாழும் இக்காலத் தமிழ் தலைமுறையினர் சுயமரியாதை (திராவிட) உணர்வற்று உள்ளனர்.  சாதிப்பெயரை சேர்த்துக் கொள்வது அவர்களுக்கு இழுக்காக படவில்லை.  முகநூல் பக்கங்களில் தங்களது பெயருடன் சாதியையும் சேர்த்து எழுதுகிறார்கள்.  அவர்களுக்கு எடுத்து சொல்ல ஆளில்லை.  அல்லது அது அவர்களுக்கு புரியவில்லை.

இன்றும் வடக்கில் நம்மை முழுப்பெயர் கூறுமாறு கேட்கிறார்கள்.  நம் பெயரை கூறினாலும், மீண்டும் முழுப்பெயர் என்னவென்று வினவுகிறார்கள்.  அவர்களுக்கு முழுப்பெயர் என்பது சாதியையும் சேர்த்துதான் ஆகிறது.

தமிழகம் மட்டும் தன் வழி தனி வழி என இருப்பது, நாமெல்லாம் இன்றும் பெருமை பட வேண்டிய விடயம்.  இதற்கு பெரியாரின் புரட்சி மட்டுமே காரணம் என்பது யாவரும் ஒத்துக்கொண்டுதான் ஆகவேண்டும் என்பதில்லை.  நடைமுறையில் அந்த புரட்சியின் பாதிப்பை பார்த்து தெளிந்து கொள்ளலாம்.

எவ்வளவு பெரிய மதப்பற்றாளனாகவும், சாதிப்பற்றாளனாகவும் இருந்தாலும் பொது வாழ்வில் உள்ள பெரிய மனிதர்களும் தமிழகத்தில் தத்தம் பெயருடன் சாதிப் பெயரை விட்டொழித்துள்ளனர். இதுவே நாம் தமிழக இந்துத்துவவாதிகளை பாராட்ட போதுமானது.

Posted in கட்டுரைகள் | 1 பின்னூட்டம்

தமிழ்ப் பயணம்


செம்மொழி

செம்மொழியே! உன்னை செம்மையாக்கியதில்
ஆன்றோரும் சான்றோரும் பெருமைப்பட்டுக்
கொள்வதில் பெருமையில்லை!

அகிலமே உன்னை அரியணையேற்றினாலும்
அயல்மொழியை ஆராதிக்கும் கூட்டமிங்கு
இன்னும் குறையவில்லை!

எளியோரும் தமிழை கற்றாலே
நின் வனப்பு சாத்தியமாகுமென்ற
ஆவலும் அற்றுப் போகவில்லை!

Posted in கவிதைகள் | பின்னூட்டமொன்றை இடுக

தமிழ்ப் பயணம்


வரங்கொடு இறைவா!

வரங்கொடு இறைவா நீ உண்டெனில்,
முத்தமிழாய் பிறக்க!
வரங்கொடு இறைவா நீ உண்டெனில்,
தமிழ்க்கனியாய் பிறக்க!
வரங்கொடு இறைவா நீ உண்டெனில்,
தமிழிசையாய் பிறக்க!
வரங்கொடு இறைவா நீ உண்டெனில்,
தமிழ்க்கலையாய் பிறக்க!
இல்லையேல்,
வரங்கொடு இறைவா என் தமிழ்
மீதுள்ள ஆர்வம் குறையாமலிருக்க!

Posted in கவிதைகள் | பின்னூட்டமொன்றை இடுக