தமிழகத்தில் கவர்ச்சி அரசியலைத் தொடங்கி வைத்தது, புரட்சித் தலைவர் என்று கூறப்படும் எம்ஜியார்தான் என்பது அவ்வளவு எளிதில் யாரும் மறுக்க முடியாத உண்மை.
அன்று அவர் இறப்புக்கு ஜெயலலிதாவைப் பலவாறு சாடினார்கள். காலச்சக்கரம் சுழன்று இன்று இவர் இறப்புக்கு இருப்பவர்களைச் சாடுகின்றனர். அதன் மூலம் அவரைப் புனிதப்படுத்தும் காரியம் மிக நேர்த்தியாக நடைபெறுகிறது. இறந்தவரைப் பற்றி பேசக்கூடாது என்று வேறு நம்மைச் சபிக்கிறார்கள். அன்று எம்ஜியார் பக்தர்கள் ஜெயலலிதா தலைமை பொறுப்பு ஏற்றதை அவ்வளவு எளிதாகச் சீரணிக்க முடியாதவர்களாக இருந்தனர். ஆனால் அதனை எல்லாம் கடந்து அரசியல் நுணுக்கங்கள் கற்று ஆய்ந்து தமிழகத்தில் தவிர்க்க முடியாத சக்தியாக மாறி, இன்று புனித அம்மாவாக மாறி நிற்கின்றார்.
அதுபோல் இன்று சசிகலா அம்மையாரை (நாமும் கூறி வைப்போம்) எதிர்ப்பவர்கள் அன்று ஜெயலலிதாவுக்கு நடந்ததை மறந்து அரற்றித் திரிகிறார்கள். ஜெயலலிதாவுக்கு இருந்த சவால்களை விட இன்று சசிகலாவுக்கு கட்சியிலும் ஆட்சியிலும் சாதகமான சூழ்நிலையே நிலவுகிறது. ஆகையால் இவரும் அரசியலில் வலம் வருவதற்கு ஒளிமயமான வாய்ப்புகள் உள்ளதை ஒதுக்கித் தள்ள முடியாது. பல எதிர்ப்புகளைக் கொண்ட ஜெயலலிதாவையே ஏற்றுக் கொண்ட தமிழக மக்கள் சசிகலா அம்மையாரையும் ஏற்றுக் கொள்ளும் காலம் வரலாம். இதற்கு தக்கவாறு மக்கள் மன நிலையைக் கட்டி அமைப்பதற்குத் தமிழகத்தில் தேர்ந்த ஊடகங்கள் பல கட்டண செயல்பாட்டில் உள்ளன.
ஆகையால் இதுவும் கடந்து போகும் எனும் முனிவரின் மனநிலை தாண்டி நாம் சிந்திப்பதற்கு எதுவும் இங்கு இல்லை.