தமிழ் தமிழரிடத்தில் … (1)


“தமிழர்களின் வாழ்வில் தாய்மொழிக்குக் கொடுக்கப்படும் முக்கியத்துவம் என்ன? அதனை அதிகரிக்க என்னென்ன வழிமுறைகளைக் கையாளலாம்?” என்று கேட்கும் நிலையில் உள்ள தமிழர்களான நாம் அனைவரும் வெட்கப்படவேண்டிய விடயம்.  என்ன செய்வது? இதன் அக/புற காரணிகள் எண்ணிலடங்காது. அகக்காரணிகள் என்பவை ஒவ்வொரு மனிதனும் தன்னளவில் தமிழுக்கு ஆற்றும் தொண்டும் அல்லது இழுக்கும் எனலாம். புறக்காரணிகள் என்பவை தனிமனிதனின் கட்டுப்பாட்டுக்குள் அடங்காதவையான ஆளும் வர்க்கமும் அரசுமும்  ஆகும்.  புறக்காரணிகள் எளிய மனிதர்களின் சக்திக்கு மீறியவையாக இருந்தாலும்,  அகக்காரணிகளையேனும் நாம் அலசித்தான் ஆக வேண்டும்.

தமிழ் சமுதாய மக்கள் இன்று அவர்களின் வாழ்வில் தாய்மொழிக்கு அவ்வளவாக முக்கியத்துவம் கொடுப்பதாக தெரியவில்லை.  ஆனால் தமிழில்தான் மொழியைப் போற்றும் கவிதைகளும் உரைகளும் மிகுந்துள்ளன எனலாம்.  ஆனால் அதற்குரிய முக்கியத்துவத்தை நடைமுறையில் கொடுக்கிறார்களா என்றால், அதுதான் இல்லை.  நடைமுறையில் இல்லாத எந்த ஒரு பழக்கமும் அழிந்து ஒழிந்து போவது என்பது இயற்கை.  இதை புரிந்துகொண்டாலே பாதி வேலை முடிந்துவிடும்.

தொன்று தொட்டு வரும் மொழிகளுள் ஒன்று நம் தாய்மொழியாம் தமிழ் மொழியும் ஒன்று என கூறிக்கொள்வதில்தான் எத்தனை எத்தனை பெருமிதம் அடைகின்றார்கள், ஆங்கிலம் வழி அதனை அறிந்து கொண்டு, தமிழைப் படிக்க கூட தெரியாத நம் புதிய தலைமுறைகள்.

சங்கத்தமிழர்கள் தமிழை இயல், இசை, கூத்து என மூன்றாக பிரித்து தமிழை ஊட்டி நாளும் வளர்த்தார்கள்.  இன்று இயல் தமிழானது பெரும்பாலும் செய்தி ஊடகங்கள் வளர்த்து வருகின்றன.  மற்ற இலக்கிய நூல்களை சாமான்ய மக்கள் நெருங்குவதில்லை.  இசையும் கூத்தும் ஒருங்கே அமையப்பெற்றதாய் இருப்பது திரைத்துறைதான் என்றால் அது மிகையில்லை.  இன்றைய நிலையில் திரைப்பட துறைதான் வெகுமக்கள் ஊடகமாக திகழ்கிறது.  எனவே அதன் வழி தமிழின் முக்கியத்துவத்தை அதிகரிக்க செய்யலாம். ஆனால் அதில் மிகுதியாக இருப்பது பொருள் குற்றமா சொல் குற்றமா என்று அந்த நக்கீரனும் சிவபெருமானும்  வந்துதான் பட்டிமன்றம் வைத்து தீர்ப்பளிக்க வேண்டிய சூழல் நிலவுகிறது.  இப்படித்தான் இருக்கிறது நம் தாய் மொழியின் இன்றைய நிலை.  இவர்களை சங்கம் வைத்து தமிழ் வளர்க்க சொல்லவில்லை.  இருக்கும் தமிழை மென்று விழுங்கி, கடித்து துப்பாமல் இருந்தால் போதும்.

இன்றைய சூழலில் தமிழ் படங்களின் பெயர்கள் மட்டும்தான் தமிழில் உள்ளன. அதுவும் வரி விலக்கு போன்ற பயனை அடைவதற்கான ஒரு கருவியாகத்தான் இருக்கிறது..  தமிழ் படங்களில் பயன்படும் தமிழை விட மொழிமாற்று படங்களின் தமிழ் அருமையாகவே இருக்கிறது.  அது பலருக்கு இன்று கேலிக்குரிய பொருளாக மாறி நிற்கிறது. அந்த மாதிரியான படங்களை பார்த்துதான் என் பிள்ளைகள் இன்று தூய தமிழ் சொற்களை அறிந்து வைத்துள்ளனர்.  இது சில நேரங்களில் எனக்கு வியப்பையும் சிரிப்பையும் வரவழைத்தாலும் சிந்திக்ககூடிய ஒன்றாகவே உள்ளது.  ஏன் தமிழ் திரைப்படங்களில் இந்த மாதிரியான அல்லது கொஞ்சம் அதிகமான தூய தமிழை பயன் படுத்த கூடாது. அப்படி பயன் படுத்த நம்மை தடுத்தாட்கொள்வது எது என்பதை நாம் சற்று ஆராய வேண்டும்.

தமிழர்களை மற்ற மொழியினருடன் ஒப்பிட்டால் தாய்மொழிக்கு இவர்கள் கொடுக்கும் முக்கியத்துவத்தை விட மற்ற மொழியினர் அவர்கள் தாய்மொழிக்கு அதிகமாகவே கொடுக்கின்றனர்.  சான்றாக, எந்த வடநாட்டவரும்  அவர்கள் குழந்தைக்கு மற்ற மொழி பெயர்களை வைத்து பெருமை அடைவதை இதுகாறும் நான் கண்டதில்லை.  ஆனால் தமிழர்கள் தங்கள் குழந்தைகளுக்கு தமிழில் இல்லாத எழுத்துக்களை கொண்டு பெயர் வைத்து பெருமிதம் அடைகின்றனர்.  சாதரணமாக ஒரு பெயர் வைப்பதில் கூட இவர்கள் ஏன் இத்தனை கோழைகளாக உள்ளனர்.  தமிழில் பெயர் வைப்பதை அவமானகரமான ஒரு செயலாக நினைக்கிறார்கள்.  இப்படித்தான் இவர்கள் தங்கள் தாய்மொழிக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்.  தமிழில் பெயர் சூட்டுவது ஒன்று மட்டும் அவ்வளவு பெரிய தமிழ் தொண்டாகிவிடாது.  அது ஒரு சிறிய தொடக்கமாக இருக்கட்டும்.

தொடக்கத்தில் கூறியதை போல் புறக்காரணிகள் என்பவை ஆளும் அரசும் அவற்றின் துறைகளும் மொழி வளர்வதற்கு எத்தனை தடைகளாக உள்ளன என்பது அனைவரும் அறிந்ததே.  இருந்தும்  சாமான்ய மக்களால் அதனை எதிர் கொள்வது அவ்வளவு எளிதல்ல.  எனவே ஆள்பவர்கள் தாய்மொழிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் திட்டங்களை கொண்டு வரவேண்டும்.  அவர்கள் அப்படி திட்டத்தை போடுமாறு மக்கள் அவர்களுக்கு போராட்டங்கள் மூலம் அழுத்தங்கள் கொடுக்க வேண்டும்.

தாய்மொழி என்பது இயற்கை வழி பட்டது.  அதன் மூலம் படிக்கும்போது புரிதல் மேம்படுவது மட்டுமல்லாமல் இயற்கையாகவே சம்பந்தபட்ட பாடங்களில் ஒரு ஈர்ப்பும் பிணைப்பும் உண்டாகும்.  இது அனுபவ பூர்வமான உண்மை.

என்னதான் ஆங்கிலத்தில் படித்தாலும் தமிழில் படிக்கும் போதுள்ள ஈர்ப்பு போன்று இல்லை.  ஆனால் காலவோட்டத்தில் உலகமயம், தனியார்மயம் என்று தமிழ் பள்ளிகள் காணாமல் போய், குறைந்து போய், தேய்ந்து போய், இன்று காசு கொடுத்து ஆங்கில தனியார் பள்ளிகளில் படிக்கும் சூழல் நிலவுகிறது.  தமிழகத்திலேயே தமிழ் வழி கல்வியின் மகத்துவம் குறைந்த பின் வெளி மாநிலங்களின் நிலையை தனியாக எடுத்து கூறத்தேவையில்லை.   இதில் ஆசிரியர்களின் குற்றமும் நிறைய உண்டு.  அன்று தமிழ் வழி படித்தவர்களும் இன்று நல்ல நிலையில் உள்ளனர்.  ஆனால் ஆசிரியப் பெருமக்கள் அடுத்த தலைமுறையை தமிழில் ஈடுபாடு கொண்டவர்களாக வளர்க்க தவறி விட்டனர்.  தத்தம் பிள்ளைகளை ஆங்கிலப் பள்ளிகளில் பயில அனுப்பி மற்றவர்களுக்கு எடுத்துகாட்டாக இருக்க தவறிவிட்டனர்.

“தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா”  என்ற சொற்றொடர் உணர்ந்து எழுதியதாகத்தான் இருக்க முடியும்.  தமிழகம் தவிர்த்து வெளி மாநிலங்களில் பிறந்து வளர்ந்த பல தமிழர்கள் தாங்கள் தமிழர்கள் என்று அடையாளபடுத்தப் படுவதை கூட விரும்பாதவர்களாகத்தான் உள்ளார்கள்.  இவர்களுக்கு அப்படி என்ன தாழ்வு மனப்பான்மையோ புரியவில்லை.

மேலும் தமிழில் பிற மொழி சொற்களை எழுதுவதற்கு உரிய எழுத்துக்கள் இல்லை என்ற வாதமும் சரியானதல்ல.  அப்படி பார்த்தால் உலகில் உள்ள எந்த ஒரு மொழியும் மற்ற மொழிகளை கற்பதற்கு ஏற்ற கருவியல்ல.  ஒரு மொழியை கற்க வேண்டுமாயின் நேரடியாக அந்த மொழியை படிப்பதின் மூலமே நலம் பயக்கும்.  அதுவன்றி உச்சரிப்புக்களும் எழுத்துக்களும் மாறுபடுகின்றன என்று ஒப்பாரி வைக்கலாகாது.  அது அறிவார்ந்த செயலும் இல்லை.  ‘ழ’கரமானது தமிழ் மொழியை தவிர மற்ற உலக மொழிகளில் காணப்படுவது இல்லை.  ‘தமிழ்’ என்ற பதத்தை இந்தியில் ‘தமில்’ என்றும், குசராத்தியில் ‘தாமில்’ என்றும், மற்றும் ஆங்கிலத்தில் ‘டமில்’என்றும் உச்சரிக்கின்றனர். அது தவறும் இல்லை. அது அவரவர் மொழிவாகு. அட, அவர்கள் (வட இந்தியர்கள்) மூன்று எழுத்து கொண்ட ‘அருள்’ என்ற என் பெயரைக் கூட எத்தனை முறை கூறினாலும் ‘அருண்’ என்றுதான் விளிப்பார்கள்.  அவர்களுக்கு பிறகு இந்தியிலும் ஆங்கிலத்திலும் எழுதிக்காட்டிய பின்தான் புரியும்.  அவர்களை என்றாவது அணுகி இவர்கள் அது சரியான உச்சரிப்பு இல்லை என்று கூறியிருப்பார்களா அல்லது கூறுவார்களா.  மாட்டார்கள்.  அதுபோல் அவரவர் மொழிவாகுக்கு ஏற்றவாறு சொற்களை அமைப்பதுதான் தொன்றுதொட்டு வரும் உலக வழக்கும் மரபும் ஆகும்.  இதனை உணர்ந்தால் தமிழை பகடி பேசுபவர்கள் திருந்தலாம்.  பிறமொழிச்சொற்களை தமிழுக்கு ஏற்ற ஒலியமைப்பில் அமைப்பதுதான் சாலச்சிறந்ததும் இனிமையும் ஆகும். ஆனால் இன்றோ இவையனைத்தையும் புறக்கணித்துவிட்டு பிற மொழி பெயர் சொற்களை அப்படியே பயன் படுத்த எத்தனிப்பதின் விளைவுதான் இவர்கள் தமிழை குறை கூறுவதில் கொண்டு போய் நிறுத்துகிறது.

ஐரோப்பிய கண்டத்து வீரமாமுனிவர் இயேசு காவியத்தை ‘தேம்பாவணி’ எனப் பெயரிட்டு தமிழில் படைத்த போது தமிழின் சுவை குன்றாது குலைக்காது எவ்வளவு இனிமையுடன் படைத்திருப்பார்.  மாற்று மொழியின் உன்னதம் அறிந்து அதற்கேற்றார்போல் ஒவ்வொரு கதை மாந்தர்களின் பெயரையும் இடப்பெயர்களையும்  தமிழ்ப் படுத்தி சுவை கூட்டி மெருகேற்றியிருப்பார்.

எனவே வக்கணை பேசுபவர்கள் சற்று உணர்ந்து சிந்தித்து பார்த்தால் நன்மை பயக்கும்.

இது மட்டுமின்றி அனைத்து உலகத் தமிழர்களையும் ஒன்றிணைக்க அரசியல் தவிர்த்த பேரியக்கம் ஒன்று கட்ட வேண்டியது மிகவும் அவசியமாகிறது.  அவ்வியக்கமானது தமிழ் கலை கலாச்சார பண்பாட்டில் கவனம் செலுத்தி இயல், இசை, கூத்து என முத்தமிழையும் ஒருங்கே வளர்க்க முயற்சி செய்யலாம்.

Advertisements

About த.வெ.சு. அருள்

TVS ARUL WHO TRY TO GET INTEREST OF TAMIL READERS ON HIS SITE
This entry was posted in கட்டுரைகள். Bookmark the permalink.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s