தமிழ்ப் பயணம்


ஒப்புமை:

என்னகத் தமிழே!  உனை
பொழுதானால் வாடும் மலருக்கு ஒப்பேன்!
எம்பெருந் தமிழே! உனை
உவர்க்கும் பெருங் கடலுக்கும் ஒப்பேன்!
எம்மெய்த் தமிழே! உனை
காலத்தால் வெம்பும் கனிக்கும் ஒப்பேன்!
என்விழித் தமிழே! உனை
எனை யீன்ற அன்பன்னைக்கும் ஒப்பேன்!
என்னுயிர் தமிழே! உனை
அகில மனைத்தும் காக்க முனையும்
தன்னுயி ரெனக் கொண்டேன்!

Posted in கவிதைகள் | பின்னூட்டமொன்றை இடுக

கண்டவர் விண்டிலர்! விண்டவர் கண்டிலர்!


 

இந்த சொற்றொடர்கள்தான் எவ்வளவு ஆழமானவை.  இதனை யாரும் எப்படி வேண்டுமானாலும் புரிந்துக்கொள்ளலாம்.  புரிந்துக்கொள்வதும் அவ்வளவு கடினமல்ல.  அதற்காக முக்காலமும் உணர்ந்த ஞானியாக இருக்க வேண்டும் என்ற அவசியமும் இல்லை.  உண்மையை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் இருந்தால் மட்டும் போதும்.

எப்பொழுதுமே ஞானிகள் பேசுவதும் விஞ்ஞானிகள் பேசுவதும் சராசரி மனிதனுக்கு குழப்பமாக தோன்றலாம்.  ஆனால் இருவருமே சென்றடையும் இடம் ஒன்றுதான்.  ஆதிகாலம் தொட்டு ஆன்மீகத்தில் உச்சநிலை என்பது பற்றற்ற வாழ்வையே குறித்து வந்துள்ளது.  ஆம் அது மெய்யாகலாம்.  பேரண்டத்தின் பேருண்மையை அறிந்த பிறகு உலகப்பற்று அற்றுப்போகும்.

இன்னும் எளிமையாக கூறவேண்டுமெனில், பேரண்டத்தை பூச்சியம் (அ) ஒன்று எனவும் ஒப்பிடலாம். இதற்கு எடுத்துக்காட்டாக பலவற்றை கூறலாம்.

அண்டத்தில் உள்ள அனைத்துப் பருப்பொருட்களின் கடைசி அணுத்துகளின் பண்பு ஒன்றேயாம். அதேபோல் நமது பேரண்டத்தின் இயக்கத்தைப் போலவே நம் கண்களுக்கு புலப்படாத செல்களின் இயக்கமும் உள்ளன.  சூரியனை நவக்கிரகங்கள் சுற்றிவருவதுபோல செல்லின் உட்கருவை மையமாக கொண்டு எலக்ட்ரான்கள் சுற்றிவருகின்றன.  இது ஒரு சிறிய எடுத்துக்காட்டுத்தான்.  இதுபோல் அண்டத்தில் உள்ள அனைத்துமே ஏதோ ஒரு வகையில் ஒன்றோடு ஒன்று ஒத்து போகின்றன. இவ்வாறு முயன்றால் அனைத்திலும் ஒரு ஒற்றுமையை காணலாம்.

அதாவது ஒழுங்கற்ற ஒரு வடிவத்தில் ஒரு ஒழுங்கு காணப்படுகிறது.  அதுதான் பேரண்டம்.  அதேபோல் நேரம் காலம் என்பதனைத்தும் இப்பூவுலகிற்கும் அதிலுள்ள உயிரினங்களுக்குந்தான்.  ஆனால் பேரண்டத்தில் நேரம், காலம், வயது என்று எதுவும் கிடையாது.

சுருங்க கூறின், உலகத்தில் உள்ள எப்பொருளையும் எரித்து சாம்பலாக்கி ஊதிவிட்டால் காற்றில் கரைந்துப் போகும். அதுவே பூச்சியமாகும். அதுவே ஒன்றாகும்.

நாம் அறிந்தது அறியாதது அனைத்தும் ஒன்றே (அ) ஒன்றுமேயில்லை எனக்கூறலாம்.  இதில் குழம்புவதற்கு ஏதுமில்லை.  எனவே பூச்சியம் அல்லது ஒன்று என்ற இருநிலையை தவிர நம் பெருவாழ்வில் வேறொன்றுமில்லை இதை உணர்ந்தால் உலகில் பிணக்குகள், மனமாச்சரியங்கள், பிரச்சினைகள், என எதுவும் இருக்காது.  ஆனால் ஒன்று, ஒரு வேளை உலக இயக்கமே கூட நின்று விடலாம்.  கெட்டது என்று ஒன்று இருந்தால்தான் நல்லது என்று ஒன்று புரிபடும்.  எனவே அனைத்துக்கும் இரு காரணிகளும் முக்கியம்.

இவ்வாறு ஞானிகள் என்றால் காவி உடைத்தரித்து தவக்கோலத்தில் காட்டில்தான் திரியவேண்டும் என்ற அவசியமும் இல்லை.  விஞ்ஞானிகள் என்றால் நவநாகரிக உடையில் குளiரூட்டப்பட்ட அறையினுள் அமர்ந்து ஆராய்ச்சி மட்டும் செய்பவரும் அல்ல.

நம் பெருவாழ்வை அறிவியலாகவோ, ஆன்மீகமாகவோ (அ) கணிதமாகவோ எதில் வேண்டுமானாலும் பொருத்தலாம் அதுவே அகிலத்தில் அனைத்தும் ஒன்றுதான் என விளங்க வைக்கும்.  எடுத்துக்காட்டாக பூச்சியம் (0) என்பது கணிதமொழி (ம) கணினி மொழி.  அதுவே அறிவியலும் ஆகும்.  கணிதமும் ஆகும். கணிதமும் ஒரு வகையில் அறிவியல்தானே.  அதேபோல் ஆன்மீகத்தில் பற்றற்ற நிலையே பேரானந்தம் என்று ஆன்றோர்கள் விளக்கியுள்ளனர்.  அப்பற்றற்ற நிலை என்பது பூச்சியமேயாகும்.

நமக்கு பிடிக்கவில்லையென்றாலும் உலகில் சிலபல விசயங்கள் இருக்கத்தான் வேண்டும். அன்றி, உலக சுவையே குன்றிப்போகும். எனவே பற்றற்ற நிலையை அடையும் பாதையை நம்மால் உணர முடியும்.  ஆனால் அதனை அடைவது பெரும் போராட்டமாக இருக்கும்.  உள்ளதை உள்ளபடி ஏற்றுக்கொள்வதே சராசரி மனித வாழ்விற்கு பொருத்தமானதாகும்.

எனவே பேரானந்தத்தை உணர்ந்தவரால் விளக்க வார்த்தை கிடைக்காது அப்படியே விளக்கினாலும் அது பிறருக்கு விளங்காது.  எனவே கண்டவர் விண்டிலை எனக்கொள்ளலாம்.  மேலும் அவர் காணாமல் உணர்ந்து விளக்குபவராகிறார் எனவே விண்டவர் கண்டிலை எனவும் கொள்ளலாம்.

Posted in கட்டுரைகள் | பின்னூட்டமொன்றை இடுக

தமிழ்ப் பயணம்


ஐகாரக் காதல்:

ஐந்திலக்கியப்புகழ் கொண்ட பெருந்தமிழே!
ஐவிரல் கரத்திற்கு அழகுபோல்
ஐம்பெருங் காப்பியமது நினக்கழகு!
ஐசுவரியம் இழந்தால் தேவரின்
ஐராவதமும் கலையிழக்கும்! ஆக
ஐயா, செந்தமிழ் செல்வமதில்
ஐக்கியமாகி அழிக்க இடங்கொடாதிருப்போம்!
ஐயர் ஓதும் வேதந்திருத்தி
ஐயமின்றி பைந்தமிழில் பாடச்செய்வோம்!
ஐப்பசிதோறும் ஒளிரும் சுடர்போல்
ஐந்தமிழொளி சுடர் ஒங்க
ஐம்படை கொண்டு காத்திடுவோம்!

Posted in கவிதைகள் | பின்னூட்டமொன்றை இடுக

தமிழ்ப் பயணம்


ஏகாரக் காதல்:
 
ஏற்றம்பல பெற்றிடலாம் செந்தமிழ்
ஏணியதன் மேல் உவகையோடு
ஏறிடவே!  பசுந் தூய்மை
ஏலமணத் தமிழன்றி என் மனம்
ஏற்காது பிறமொழி உறவினை
ஏவினாலும்! அக்கலப்பினால் தமிழுக்கு
ஏற்படும் தீய தொரு
ஏப்பதனை விரட்டிடலாம்!  உதவிடலாம்
ஏழையவனை பொருள் கொடுத்து!
ஏசிடலாம் தமிழுரை யாடுதளில்
ஏனிந்த கஞ்சமென்று, நன்தமிழ்
ஏடதனை கொடுத் துதவி!

Posted in கவிதைகள் | பின்னூட்டமொன்றை இடுக

தமிழ்ப் பயணம்


எகரக் காதல்:

எந்தேன் தமிழே! இப்புவியில்
எத்தனை எத்தனை பிறவி
எடுத்தாலும் உனை மறந்து
என்னால் இயலுமா வாழ!
எல்லாந் துறந்தும் மனதில்
எஞ்சி நிற்பதெந்தமிழ் பற்றொன்றே,
என்று வெளிக்கூறலும் வேண்டுமோ!
எல்லையு முண்டோ நினைபோற்ற
என யாவருமறிதல் பயனன்றோ!
எத்திசையும் தமிழ் புகழொலி
எழும்ப செய்தலும் நம்
எல்லோரின் கடமை யன்றோ!

Posted in கவிதைகள் | பின்னூட்டமொன்றை இடுக

திட்டம்… நல்ல திட்டம்…


தமிழ்நாட்டு அளவில் இருந்த ஒரு ஜெயலலிதாவுடைய நிர்வாகத்திறமை(?) புகழ்ச்சியை கேட்டு கேட்டு பல வருடங்களாக காதடைத்து போயிருந்தது.  மெல்ல மீண்டு வரும் நேரத்தில், அதே அளவு அல்லது அதைவிட மேலதிக நிர்வாகத்திறமையுடைய(?)  ஆம்பள ஜெயலலிதா மோடியின்  இந்திய அளவிலான புகழ்ச்சி இரைச்சலை கேட்டு கேட்டு மீண்டும் காதிரண்டும் மந்த நிலைக்கே சென்று கொண்டு இருக்கிறது.

ரூபாய் நோட்டு ஒழிப்பு திட்டம் ஒரு நல்ல திட்டம்தான், ஆனால் தக்க முன்னேற்பாடு வேண்டும், அது , இது என்று ஓராயிரம் சப்பைக்கட்டு காரணங்களை அடுக்கி மோடிக்கு முட்டு கொடுத்து நிற்கின்றனர்.  ஆனாலும்,  இந்த ஆட்சியாளர்கள் என்றுமே மக்களுக்காக திட்டம் தீட்டியவர்கள் இல்லை.  யானை கூட்டம் உண்ணும் உணவின் சிதறலில் இருந்து எறும்புகள் பசியாறுவதைப் போல் எளியவர்களும் பிழைத்து வாழ வேண்டும்.  எளியவர்களை பாதிக்கும் எந்த ஒரு திட்டமும் கண்டிப்பாக மக்களுக்கான திட்டம் கிடையாது.  இதையெல்லாம் கண்டுபிடிக்க ஒரு மெத்த படித்த பொருளாதார நிபுணராகத்தான் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.

முதலாளிகளுக்கான திட்டங்களை தீட்டி அதில் இருந்து மக்களுக்கு கிடைக்கும் சில பல பலன்களை காட்டியே,  இது மக்களுக்கான திட்டம் என்ற மாயையை ஏற்படுத்துவார்கள்.  அந்த மாய மானையே நாமும் நிஜ மானென்று நம்பி துரத்துவோம்.  ஆனால் கடைசி வரை பிடிபடாது.  இப்படி பல மாய மான்களை ஓடவிட்டு நம்மை ஓய்வில்லாமல் பார்த்து கொள்வார்கள்.  இப்படி மாய மான்களை துரத்துபவர்கள் நிலைமை புரியாது ஆள்பவரின் வல்லமையை கட்டியங்கூற கிளம்புகையில் நம் காதில் புகை வருகிறது.

இதனால் இங்க சொல்ல வருவது என்னவென்றால், வலைதள வாசிகளும், ஊடகவியலாளர்களும் அடிக்கிற ஜால்ராவை கொஞ்சம் குறைத்து அடித்தால் காதுகளாவது தப்பிக்கும்.

Posted in கட்டுரைகள் | பின்னூட்டமொன்றை இடுக

தமிழ்ப் பயணம்


ஊகாரக் காதல்:

ஊற்றுத்தமிழ் கற்றிட உதவி
ஊக்குவித்தல் நல்வினை யென்றிடுவீர்!
ஊழியந்தளரா செய்து, தமிழ்வேர்
ஊன்றி தழைக்க செய்திடுவீர்!
ஊசிமுனை தவமிருந்தேனும் தமிழ்
ஊர்ந்திட தரணியெங்கும் வேண்டிடுவீர்!
ஊர்க்குருவி பருந்தல்லையென ஓயாது
ஊளை யிடுவோரின் வாயடைப்பீர்!
ஊமையென் றெண்ணிடுவீர் தமிழறியாரை!
ஊதித்தள்ளிடுவீர் துச்சமென்று இகழ்வோரை!
ஊருணியின் வெண்டாமரையாய் தண்டமிழில்
ஊறி நன்கு திளைத்திடுவீர்!

Posted in கவிதைகள் | பின்னூட்டமொன்றை இடுக